

தென்னாப்பிரிக்காவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன காரை மீட்டு அதன் உரிமை யாளரிடம் போலீஸார் ஒப்படைத் துள்ளனர்.
காவ்டெங் மாகாணம் பிரடோரியா நகரைச் சேர்ந்த வர்த்தகர் டெரிக் கூசன். இவருக்கு சொந்தமான டொயோட்டா கரோலா (1988) கார் கடந்த 1993-ம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்திருந்தார்.
புகார் செய்து 22 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூசனை தொடர்புகொண்ட காவல் துறை அதிகாரி வாக்வா டொகோலா, “உங்களுடைய கார் கிடைத்துவிட்டது, வந்து ஓட்டிச் செல்லுங்கள்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ரோனெல் ஓட்டோ கூறும்போது, “கடந்த ஆண்டு லிம்போபோ மாகாணத்தில் சாலை யில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பரிசோதித்தபோது அதிலிருந்த இன்ஜின் எண் அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் காரை பறிமுதல் செய்து, அதன் எண்ணை சிரமப்பட்டு கண்டுபிடித்தபோது அந்தக் கார் கூசனுடையது என தெரியவந்தது” என்றார்.
இதுகுறித்து கூசன் கூறும்போது, “என்னுடைய கார் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. காரை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை மீண்டும் பயன்படுத்தப் போகிறேன். காருக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. இதை என்னால் நம்பவே முடிய வில்லை” என்றார்.