Published : 23 Feb 2020 08:10 AM
Last Updated : 23 Feb 2020 08:10 AM

தலிபானுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்

மைக் போம்பியோ

காபூல்

அமெரிக்கா, தலிபான் இடையே ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. வரும் 29-ம் தேதி இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 2,977 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தீவிரவாதிகளை அழிக்க அந்த நாட்டின் மீது கடந்த 2001 டிசம்பரில் அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது முதல் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

1 லட்சம் பேர் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியும், காயமடைந்தும் இருப்பதாக ஆப்கனில் உள்ள ஐ.நா. துணைக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு கட்டுப்பாட்டில் 55 சதவீத பகுதிகள் மட்டுமே உள்ளன. அந்த நாட்டின் பெரும் பகுதி இன்னமும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமெரிக்கா, தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்புக்கும் பொதுவான கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஒரு வார போர் நிறுத்தம்

முதல்கட்டமாக ஒரு வார போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தரப்பில் 14,000 வீரர்கள், நேட்டோ நாடுகள் தரப்பில் 17,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்களும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்களும் தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு படைகள், அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தலிபான்களும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த போர் நிறுத்த உடன்பாடு வெற்றி பெற்றால் வரும் 29-ம் தேதி அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும். இதிலும் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இந்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது. தலிபான்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் இயக்கமாக மாறினால் மட்டுமே ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x