Last Updated : 22 Feb, 2020 12:49 PM

 

Published : 22 Feb 2020 12:49 PM
Last Updated : 22 Feb 2020 12:49 PM

இந்தியாவில் மதச் சுதந்திர விவகாரம்; மோடியிடம் ட்ரம்ப் பேசுவார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் இந்தியா வரும்போது பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24, 25-ம் தேதிகளில் இருநாட்கள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கும் அதிபர் ட்ரம்ப் அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க குஜராத் அரசும், மத்திய அரசும் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இந்நிலையில், சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின், மதச் சுதந்திரம் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதிபர் ட்ரம்ப் இந்தியா செல்லும் போது, சிஏஏ, என்ஆர்சி குறித்து விவாதிப்பாரா என்று கேட்டனர்.

அதற்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில், "நம்முடைய பாரம்பரிய ஜனநாயகத்தின் மதிப்புகள் மற்றும் மதச் சுதந்திரம் குறித்து அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவும், பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையிலும் சந்திக்கும்போது பேசுவார். இந்த விஷயங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் மதச் சுதந்திரப் பிரச்சினை குறித்தும் பேசுவார் .

பிரபஞ்சத்தின் மதிப்புகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பராமரிக்க இருவருக்கும் சரிசமமான பொறுப்பு இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய ஜனநாயக மதிப்புகள், அமைப்புகள் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இந்தப் பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பின்பற்ற நாங்கள் ஊக்கப்படுத்துவோம்.

உலக அளவில் இந்தியா எவ்வாறு பாரம்பரிய மதிப்புகளைப் பின்பற்றி வருகிறது, சிறுபான்மை மதச் சுதந்திரத்தின் மீது எவ்வாறு மதிப்பளிக்கிறது என்பதை உன்னிப்பாகப் பார்த்து வருகின்றனர்.

உண்மையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மதச் சுதந்திரம், சிறுபான்மை மதத்தினருக்கு மதிப்பளித்தல், அனைத்து மதங்களையும் சமமாக மதித்தல் போன்றவை இருக்கிறது. ஆதலால், இதுபோன்ற விஷயங்களை நிச்சயம் அதிபர் ட்ரம்ப் விவாதிப்பார் என நினைக்கிறேன்.

இந்தியா என்பது வலிமையான ஜனநாயக அமைப்பைக் கொண்ட நாடு. இங்கு மதம், மொழி, மற்றும் பன்முகக் கலாச்சாரம் போன்ற உயர்ந்த விஷயங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு மதங்கள் உதயமானது இந்தியாவில்தான் என்பதை மறுக்க முடியாது

பிரதமர் மோடி தேர்தலில் வென்றவுடன் தனது முதல் பேச்சில், சிறுபான்மையினர் அடங்கிய இந்தியாவுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பேன் எனப் பேசினார். ஆதலால், இந்தியாவில் எவ்வாறு சிறுபான்மையினருக்கு மதச் சுதந்திரத்தை எவ்வாறு பராமரிக்கிறது, அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கிறதா என்பதை உலகம் உற்றுநோக்கும்'' என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x