பள்ளியில் ஏளனம் செய்வதை தாங்க முடியவில்லை: மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்

தாயிடம் அழுத சிறுவன்.
தாயிடம் அழுத சிறுவன்.
Updated on
1 min read

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுதுகொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ஒன்றை முகநூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் என்ற அந்தப் பெண் கடந்த புதன்கிழமை தனது 9 வயது மகன் குவாடனை பள்ளியில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

முகநூல் வீடியோவில் குள்ளமாக தோற்றமளிக்கும் அச்சிறுவன் தனது பள்ளிச்சீருடையில் கார் இருக்கையில் சாய்ந்துகொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான்.

“எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” என தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுகிறான்.

அச்சிறுவன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தை கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பள்ளியில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.

ஒரு தாயாக எனது பொறுப் பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன்” என்கிறார்.

மேலும் சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பிற பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. 1 கோடியே 50 லட்சம் முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in