

இந்தியா பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச்சு நடத்த இருக்கின்றனர்.
இதற்காக பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரத்துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ் ஆகஸ்ட் 23-ம் தேதி இந்தியா வருகிறார்.
முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், சமீபத்தில் பஞ்சாபிலும் தாக்குதல் நடத்தினர். தவிர காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் பிடிபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இஸ்லாமா பாதில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சர்தாஜ் அஜீஸ் கூறியது: பேச்சு நடத்துவதற்காக நான் வரும் 23-ம் தேதி இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ மானதாகவும், இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் முக்கிய பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் வரை அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும் என்றார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, இப்போது பேச்சு நடத்துவதற்காக இந்தியா பரிந்துரைத்த தேதிகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்திய பயணம் குறித்த இறுதி முடிவை பிரதமர் நவாஸ் ஷெரீப் எடுப்பார் என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துப் பேசினர். அப்போது இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான சந்திப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது.