கரோனா வைரஸ்; பேருந்து மீது தீ வைப்பு, கல்வீச்சு: இரக்கம் காட்டுங்கள் - உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

நோவி சன்ஷாரி நகருக்கு சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றி வரும் பேருந்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் தேசியப் பாதுகாப்புப் படையினர்.
நோவி சன்ஷாரி நகருக்கு சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றி வரும் பேருந்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் தேசியப் பாதுகாப்புப் படையினர்.
Updated on
2 min read

உக்ரைன் நகரம் ஒன்றில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை சில எதிர்ப்பாளர்கள் கற்கள் வீசித் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 2000த்திற்கும் அதிகமானோரை பலிவாங்கியுள்ளது.

இன்று அதிகாலை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 45 பேரும், மற்ற நாடுகளைச் சார்ந்த 27 பேரும் பயணித்த பேருந்து மத்திய சீன நகரமான வூஹானில் இருந்து உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வந்தது. அப்போது ஆறு பேருந்துகள் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள நோவி சன்ஷாரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு எதிர்ப்பாளர்கள் சாலையில் தீ வைத்தனர், பேருந்து மீது கற்களை வீசினர்.அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் காவல்துறையினரும் தேசியப் பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் உக்ரைனின் நோவி சன்ஷாரி நகரத்தில் உள்ள மருத்துவமனைக் கட்டிடத்தில் தங்கினர். அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அந்த 45 பேரில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை (எஸ்.பி.யு) சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''சீனாவிலிருந்து கரோனா வைரஸ் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதித்துள்ளதாக தவறான பிரச்சாரங்களை சில போலி மின்னஞ்சல்கள் ஏற்படுத்தி வருகின்றன. இதனை மக்கள் நம்ப வேண்டாம். இந்த வெளிப்படையான மோசடிகளைக் கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் அதிகாரிகள் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை, உக்ரேனில் கரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெளியேற்றப்பட்டவர்களில் யாரும் நோய்வாய்ப்படவில்லை’’.

இவ்வாறு உக்ரைன் பாதுகாப்பு சேவை மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''உக்ரேனியர்களிடம் இரக்கத்தைக் காட்டுங்கள். எதிர்ப்பைத் தவிருங்கள். பயணிகளில் பெரும்பாலோர் 30 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் நம்மில் பலருக்கு கிட்டத்தட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். ஆனால் நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு ஆபத்து உள்ளது. நாம் அனைவரும் மனிதர்கள். நாம் அனைவரும் உக்ரேனியர்கள் என்பதை மறந்துவிடுவதே ஆபத்தானது’’ என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in