Published : 27 Aug 2015 11:03 AM
Last Updated : 27 Aug 2015 11:03 AM

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்!

சீனாவின் சோங்க்விங் நகரில் வசிக்கிறார் 48 வயது சென் ஸிங்கின். ஒரு விபத்தின் மூலம் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார். ஆனாலும் தன்னுடைய குறைபாட்டை எண்ணி அவர் ஒருநாளும் மனம் உடைந்து போனதில்லை. விவசாய வேலைகளில் இருந்து அத்தனை வேலைகளையும் இரண்டு கால் பாதங்கள் மூலம் செய்து வருகிறார். சோளக் கதிர் அறுக்கிறார், சோள மணிகளைக் கால்களால் தனித்தனியே உதிர்க்கிறார், மூட்டை கட்டுகிறார். அதேபோல பாதங்களால் பாத்திரங்கள் தேய்க்கிறார், காய்கறி வெட்டுகிறார், அடுப்பு பற்ற வைத்து சமைக்கிறார். சமைத்த உணவை தன்னுடைய 91 வயது அம்மாவுக்கு ஸ்பூனை வாயில் பிடித்து, ஊட்டியும் விடுகிறார்.

‘‘அருமையான கால் பாதங்கள் இருக்கும்போது எனக்கு எதற்கு கைகள்? 7 வயதில் மின் விபத்தில் கைகளை இழந்தேன். 14 வயதில் என் சகோதரிகள் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டனர். எத்தனை காலத்துக்கு அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ முடியும்? அதனால் நானே சமைக்கவும் விவசாய வேலைகளைச் செய்யவும் கற்றுக்கொண்டேன். முதலில் சிரமமாக இருந்தது. ஆனால் இன்று கைகளால் செய்வதைப் போல எளிதாகவும் வேகமாகவும் எந்த வேலையையும் என்னால் செய்ய முடிகிறது’’ என்கிறார் சென்.

‘‘சென் போன்றவர்கள் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சென் எவ்வளவு அற்புதமான மனிதர்! அவரைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கை மீது மதிப்பு வருகிறது’’ என்கிறார் சென்னின் நண்பர்.

நம்பிக்‘கை’யுடன் வாழ்ந்து வரும் சென்னுக்குப் பாராட்டுகள்!

ஜே.டி நெட்ஒர்க் என்ற நிறுவனம் ஆசியாவில் டிசி காமிக்ஸ் உணவகங்களை ஆரம்பித்திருக்கிறது. சூப்பர் ஹீரோ கருத்தை மையமாக வைத்து மலேசியாவில் இரண்டு உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது உணவகம் சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த உணவகங்களில் டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், பேட்மேன், ஒண்டர் வுமன் போன்றவை ஒவ்வோர் உணவிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பேட்மேன் பிஸா, ஒண்டர் வுமன் ரோல், சூப்பர்மேன் பான்கேக் என்று வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. தண்ணீர் பாட்டிலில் கூட சூப்பர் ஹீரோ சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கேட் வுமன் காபி, பேட்மேன் சாக் டாஃபி, சூப்பர்மேன் மில்க்‌ஷேக் போன்றவையும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உணவுகளில் மட்டும் அல்லாமல் உணவக விடுதியின் சுவர்களில் சூப்பர் ஹீரோக்களின் படங்கள், அலமாரிகளில் சூப்பர் ஹீரோ பொம்மைகள் என்று குழந்தைகளையும் பெரியவர்களையும் அசத்துகின்றன இந்த உணவு விடுதிகள்.

சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

இங்கிலாந்தின் நார்த் யார்க்‌ஷயரில் இருக்கிறது நிட் நதிக்கரை. இங்குள்ள கிணற்றில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதால் எப்பொழுதும் கிணற்று நீர் வெளியே வடிந்துகொண்டே இருக்கிறது. அப்படித் தண்ணீர் வழியும் இடத்தில் ஏதாவது ஒரு பொருளை வைத்தால் குறிப்பிட்ட காலத்தில் அது கல்லாக மாறிவிடும் என்கிறார்கள். இலைகள், குச்சிகள், இறந்த பறவைகள், பொம்மைகள் போன்றவற்றை தண்ணீர் வடியும் இடத்தில் ஒரு கயிற்றில் கட்டி வைத்துவிடுகிறார்கள். சிறிய பொருட்கள் 5 மாதங்களில் கல்லாக மாறிவிடுவதாகவும் பெரிய பொருட்கள் ஓராண்டுக்குள் கல்லாக மாறிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

வரலாற்றாசிரியர் ஜான் லேலண்ட், இந்த நீர் 500 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ குணம் நிறைந்ததாக நம்பப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் அங்கு விழும் நீர் புளிப்புத் தன்மை மிக்கதாக மாறிவிட்டது என்றும் தண்ணீர் வடியும் இடத்துக்குக் கீழே இருக்கும் பொருட்கள் மெதுவாக கல்லாக மாறிவருவதாகவும் சொல்கிறார்கள். தண்ணீரைச் சோதித்த விஞ்ஞானிகள், நீரில் அதிக அளவில் கனிமங்கள் இருப்பதால், தொடர்ந்து தண்ணீரில் இருக்கும் பொருட்கள் மீது கடினமான கனிம ஓடு உருவாகிறது. அது பார்ப்பதற்கு கல்லாகத் தெரிகிறது என்கிறார்கள்.

எது எப்படியோ… மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது இந்த அதிசயக் கிணறு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x