

தீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல் கறுப்புப் பட்டியலில் இருக்கும் பாகிஸ்தான் அதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல்வேறு நிபந்தனைகளை அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற அவகாசத்தைச் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) அளிக்கும் எனத் தெரிகிறது.
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கைக்கான கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) 1989-ல் நிறுவப்பட்டது. சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு இடையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாதத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி உட்படச் சர்வதேச நிதி நடைமுறையின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிப்பதே இதன் நோக்கம்.
இந்த அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 1 முதல் 21-ம் தேதி வரை பாரிஸில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் வருவாய்த்துறை அமைச்சர் ஹமாத் அசார் பங்கேற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தின்போது, தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்வா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்க அளவில்லை எனக் கூறி அந்த நாட்டை க்ரே லிஸ்டில் வைக்கச் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்தது.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பாகிஸ்தான் க்ரே லிஸ்டில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கறுப்புப் பட்டியலில் ஈரானுக்கு அடுத்தார் போல் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பாரிஸில் நடந்து வரும் கூட்டத்தின் இறுதி நாளான இன்று சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தான் அமைப்புக்கு ஜூன் மாதம் வரை அவகாசம்அளிக்கும் எனத் தெரிகிறது.
ஏனென்றால், சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு விதித்திருந்த 27 நிபந்தனைகளில் பாதிக்கு மேலானவற்றை பாகிஸ்தான் கடைபிடித்து கடந்துள்ளதாகவும், தீவிரவாதிகளுக்கு நிதி, ஆயுத உதவிகள் கிடைப்பதை பெரும்பாலும் தடுத்து, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த அவகாசம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது
குறிப்பாக மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜமாத் உல் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயித்துக்கு 2 வழக்குகளில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கை போதுமான மனநிறைவுடன் இருந்து வருவதால் வரும் ஜூன் மாதம்வரை அவகாசம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.