

ஈரானில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்கள் வரிசையாக நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானில் 55,000 வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 666 பெண் வேட்பாளர்கள் என நாடு முழுவதும் சுமார் 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 290 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இத்தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெஹ்ரானில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈரானில் நடக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, விலைவாசி உயர்வு என பல சிக்கல்களைச் சந்தித்து வரும் ஈரான் அதிபர் ஹசன் ரஹ்வானியின் அரசு தனது பலத்தை மீண்டும் நிரூபிக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ஈரானின் புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமான் கொல்லப்பட்ட பிறகு நடைபெறும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.