'பாரசைட்' படத்துக்கு ஆஸ்கர் விருது ஏன்?- ட்ரம்ப் கேள்வி

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்
Updated on
2 min read

தென் கொரியத் திரைப்படமான 'பாரசைட்' படத்திற்கு எதற்காக சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இவ்விழாவில் கொரிய நாட்டிலிருந்து வெளியான 'பாரசைட்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது. இதில் 'ஜோக்கர்', 'ஐரிஷ்மேன்', '1917', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விருதுகளையும் வென்றன. இம்முறை சிறந்த அயல்மொழித் திரைப்படம் என்ற விருதுப் பிரிவு, சிறந்த சர்வதேச திரைப்படம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.

இவ்விழாவில், போங் ஜூன் - ஹோ இயக்கிய 'பாரசைட்' சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்றதோடு, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளையும் வென்ற முதல் வெளிநாட்டு மொழித் திரைப்படமாக வரலாற்றை உருவாக்கியது.

'பாரசைட்' படத்திற்கு நிறைய விருதுகள் பெற்றமைக்கு பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில் தற்போது அப்படம் ஒரு தமிழ் படத்தின் காப்பி என்ற பேச்சும் பரவலாக அடிபடத் தொடங்கியது. தமிழின் முக்கிய நடிகரான விஜய் நடித்த 'மின்சார கண்ணா' கதை திருடப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொலராடோவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்களிடம் பேசியபோது 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 'பாரசைட்' திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் மட்டுமின்றி கேன்ஸ் விருதுகளையும் வென்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ட்ரம்ப் கூறியதாவது:

''இந்த ஆண்டு அகாடமி விருதுகள் எவ்வளவு மோசமாக இருந்தன? தென் கொரியாவிலிருந்து வந்த ஒரு படம்! என்ன ஆச்சு? தென் கொரியாவுடன், வர்த்தகத்தில் ஏற்கெனவே நமக்கு உள்ள சிக்கல்கள் போதாதா?

அதற்கும் மேல், இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் என்ற சிறப்பை வேறு அவர்களுக்கு வழங்குகிறார்கள்! இது நன்றாக உள்ளதா? எனக்குத் தெரியாது. தயவுசெய்து 'கான் வித் தி விண்ட்', 'சன்செட் பவுல்வர்டு' போன்ற பல சிறந்த படங்களை நாம் பெறுவோம்.

பின்னர் நீங்கள் பிராட் பிட்டுக்கு வேறு சிறந்த துணை நடிகருக்கான விருது அளித்திருக்கிறீர்கள். நான் ஒருபோதும் அவரின் பெரிய ரசிகன் அல்ல.

கிரெட்டா துன்பெர்க் உங்களுக்குத் தெரியுமா?

அடுத்ததாக டைம் பத்திரிகையின் 2019 ஆண்டின் சிறந்த நபராக டீன் ஏஜ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கைத் தேர்வு செய்துள்ளனர். இந்த ஆண்டு நான் கிரெட்டாவால் தோற்கடிக்கப்பட்டேன் - உங்களுக்கு கிரெட்டாவைத் தெரியுமா?

நான் ஏற்கெனவே டைம் பத்திரிகையின் விருதை வென்றுள்ளேன், ஆனால் உலகம் நம் அனைவரையும் சுற்றி வரும்போது, நாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதாவது, நாங்கள் அதை வென்றுள்ளோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாம் அதை வெல்ல வேண்டும்.''

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in