

சுவிட்சர்லாந்து விமானப்படையின் முன்னாள் போர் விமானி வெஸ் ரோஸ்லி (60). அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘மனித விமானத்தை' உருவாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டில் ஜெட் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இறக்கையை முதுகில் கட்டிக் கொண்டு 7.9 அடி உயரத்தில் பறந்து காட்டினார். அன்றுமுதல் சுவிட்சர்லாந்து மக்கள் அவரை, ‘ஜெட்மேன்' என்று அழைக்கின்றனர்.
துபாயில் வரும் அக்டோபர் 20-ம்தேதி ‘துபாய் எக்ஸ்போ 2020' கண்காட்சி தொடங்குகிறது. இதில் 190 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க உள்ளன. இந்த கண்காட்சியை முன்னிட்டு துபாயில் கடந்த 14-ம் தேதி ‘மனித விமான' சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரான்ஸை சேர்ந்த ‘ஸ்கை டைவிங்' வீரர் வின்ஸ் ரெபட் (34), சுவிட்சர்லாந்து விமானி வெஸ்ரோஸ்லியின் ஆராய்ச்சியில் உருவான ஜெட் இன்ஜின் இறக்கையை முதுகில் அணிந்து கொண்டு சாகசம் நிகழ்த்தினார். இதுவரை உயரமான இடத்தில் இருந்தே ‘மனித விமானம்' பறக்க விடப்பட்டது. துபாய் சாகச நிகழ்ச்சியில், முதல்முறையாக தரையில் இருந்து செங்குத்தாக வின்ஸ் ரெபட் மேலே பறந்தார்.
8 விநாடிகளில் 100 மீட்டர், 12 விநாடிகளில் 200 மீட்டர், 19 விநாடிகளில் 500 மீட்டர், 130 விநாடிகளில் 1,000 மீட்டர் உயரத்தை அவர் எட்டினார். சுமார் 3 நிமிடங்களில் அவர் 1,800 மீட்டர் (சுமார் 6,000 அடி) உயரத்தை அடைந்தார். மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தார். அவர் முதுகில் அணிந்திருந்த ஜெட் இயந்திரங்கள் மூலம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தை கூட எட்ட முடியும். இறுதியில் பாராசூட் உதவியுடன் அவர் தரையிறங்கினார். துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தனது சமூக வலை பக்கத்தில் ‘மனித விமான' சாகச வீடியோவை வெளியிட்டுள்ளார்.
‘மனித விமான' ஆராய்ச்சியில் மேலும் முன்னேறினால், திரையில்பறக்கும் ‘அயர்ன் மேன்' கதாபாத்திரம் விரைவில் நிஜமாகிவிடும்என்று விமானவியல் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.