

உலகை உலுக்கிய தினமான மார்ச் 8, 2014 அன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது பைலட்டின் படுகொலை-தற்கொலைச் செயல்தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உறுதிபட கூறுகிறார்.
விமானங்கள் மாயமாவதில் வரலாற்றில் அனைவருக்கும் புரியாத புதிரான இந்த விமான விபத்து எப்படி நடந்தது, விமானம் எங்கே என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமலேயே இந்தியப் பெருங்கடலின் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தேடுதல் முயற்சி வீணாகி ஜனவரி 2017 அன்று தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலடித் தரை வரை தேடியும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் 2018-ல் தன் முயற்சியைக் கைவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை விமானம் மாயமானது குறித்த பலதரப்பட்ட கோட்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன, அதில் பைலட் ஜகாரி அகமெட் ஷா தற்கொலை-படுகொலை செயலாக இதைச் செய்திருக்கலாம் என்ற ஊகமும் ஒன்று.
இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் செய்தி ஆவணப்படம் ஒன்றிற்காக இது குறித்து கூறும்போது, “மலேசிய அரசின் டாப் அதிகாரிகள் நம்பிக்கையின் படி இந்த விமானத்தை பைலட் வேண்டுமென்றே தற்கொலை-படுகொலை முயற்சியாக கடலுக்குள் செலுத்தியிருக்கலாம் என்பதே.
ஆனால் யார் யாரிடம் இதைக் கூறினார்கள் என்பதை நான் கூறப்போவதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், தெளிவாகக் கூறுகிறேன். உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் மட்டத்தில் இது படுகொலை-தற்கொலைச் செயலே” என்றார்.
ஆனால் பைலட் ஜஹாரியின் குடும்பத்தினர் இதனை அடிப்படை ஆதாரமற்றது என்று தொடர்ந்து மறுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான், டோனி அபாட் கூற்றை அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார்.