Published : 22 Aug 2015 10:26 AM
Last Updated : 22 Aug 2015 10:26 AM

உலக மசாலா: ஓநாயுடன் ஓர் இரவு!

நார்வேயில் உள்ள போலார் வனவிலங்கு பூங்காவில் ஓநாய்களுடன் மனிதர்களைப் பழக அனுமதிக்கிறார்கள். இந்தப் பூங்காவில் நரி, பனிமான், கரடி போன்ற விலங்குகள் இருந்தாலும் ஓநாய்கள்தான் பெரிதும் கவர்கின்றன. ஓநாய்கள் மனிதர்களைக் கண்டுதான் அஞ்சுகின்றன. மனிதர்கள் ஓநாய்களைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. பழக ஆரம்பித்து விட்டால் ஒரு நாயைப் போல அத்தனை அன்பைக் காட்டக்கூடியவை ஓநாய்கள் என்கிறார்கள் பூங்காவின் ஊழியர்கள்.

1 மணி நேரம் முதல் ஓர் இரவு வரை ஓநாய்களுடன் தங்குவதற்கு இங்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஓநாய் பூங்காவுக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவை அன்பைக் காட்ட ஆரம்பித்து விடுகின்றன. முகத்தோடு முகம் வைத்து உரசுகின்றன. விளையாடுகின்றன. 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.

ஓநாய்களை பயமுறுத்தக்கூடாது, தீங்கு செய்யக்கூடாது, ஏதாவது தவறாகச் செய்து விட்டால் உடனே ஓநாய்களின் கவனத்தை வேறுவிதத்தில் திருப்ப வேண்டும் போன்ற விதிமுறைகள் இருக்கின்றன. பனிப்பிரதேசத்தில் நிலவு வெளிச்சத்தில் ஓநாய்களுடன் இரவு தங்குவது மிகவும் சுவாரசியமானது என்கிறார்கள். பூங்கா ஊழியர்களும் அருகில் இருப்பார்கள்.

பழகினால் விலங்குகளும் அன்பாகத்தான் இருக்குமோ…

சீனாவில் இயங்கி வருகிறது சிறுநீர் சிகிச்சை அமைப்பு. இதில் 1000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தினமும் அவரவர் சிறுநீரை ஒரு தம்ளரில் பிடித்து, குடித்து வருகிறார்கள். சீன சுகாதாரத்துறை அமைச்சகம் இதை அங்கீகரித்திருக்கிறது. தினமும் சிறுநீர் பருகுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. புற்றுநோய் கூட குணமாகிறது என்கிறார்கள். 79 வயது பாவோ யாஃபு இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது தந்தை நோயால் துன்புற்று வந்தார். அவர் சிறுநீர் குடிக்க ஆரம்பித்த பிறகு நோயிலிருந்து மீண்டுவிட்டார். அதிலிருந்து பாவோவும் சிறுநீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘‘முதல் முறை சிறுநீர் குடிப்பது கடினமான செயல்தான். ஆனால் ஒருமுறை குடித்துவிட்டால் பழகிவிடும். சில சீன மருந்துகளை விட சிறுநீர் சுவையானது. ஆரம்பத்தில் 100 மி.லி. தான் குடித்தேன். இன்று 300 மி.லி. சாப்பிடுகிறேன். குடிக்க ஆரம்பித்த ஆறே மாதங்களில் என் வழுக்கைத் தலையில் முடிகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கடந்த 22 வருடங்களில் ஒருமுறை கூட ஜலதோஷம் பிடித்ததில்லை. என் பார்வை சக்தி அதிகரித்திருக்கிறது’’ என்கிறார் பாவோ. மருத்துவர்கள் சிறுநீர் குடிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

உடலுக்குத் தேவை இல்லாத கழிவுகள்தான் சிறுநீர் மூலம் வெளியேறு கின்றன. கழிவுகளை மீண்டும் குடுப்பதால் எப்படி ஆரோக்கியம் திரும்பும் என்று கேட்கிறார்கள். ஆனால் குடிப்பவர்களோ கை உடைந்தபோது தொடர்ந்து சிறுநீர் ஊற்றி வந்ததில், எலும்பு தானாகச் சேர்ந்துவிட்டது, தைராய்டு பிரச்சினை சரியாகிறது என்று சொல்லி வருகிறார்கள். பாவோ ஆண்டுக் கணக்கில் சிறுநீரைச் சேமித்து வருகிறார். பரிசோதனைகள் செய்கிறார். பழைய சிறுநீருக்குக் கூடுதல் சக்தி இருக்கிறது. அதன் மூலமே தினமும் முகம், கண்கள், காதுகளைச் சுத்தம் செய்வதாகச் சொல்கிறார். சிறுநீர் குடிப்பதால் 120 ஆண்டுகள் வாழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது என்கிறார்.

ஐயோ… என்ன சொல்றதுன்னே தெரியலையே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x