சிரிய அரசுப் படைகளுக்கு பஷார் அல் ஆசாத் வாழ்த்து

சிரிய அரசுப் படைகளுக்கு பஷார் அல் ஆசாத் வாழ்த்து
Updated on
1 min read

இட்லிப் மற்றும் அலெப்போ பகுதிகளில் கணிசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளதால், சிரிய அரசுப் படைகளுக்கு அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் படைகளின் வெற்றிக்கு பஷார் அல் அசாத் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சிரிய அரசுத் தொலைக்காட்சியில் பஷார் அல் ஆசாத் கூறும்போது, “இந்த வெற்றி என்பது போரின் முடிவு என்று அர்த்தமல்ல. மேலும், இது பயங்கரவாதத்தின் முடிவு அல்லது நமது எதிரிகள் சரணடைவார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால், இது வெற்றிக்கான முன்னோடி.

நாம் ஓய்வெடுக்கக் கூடாது. வரவுள்ள போர்களுக்குத் தயாராகுங்கள். அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை விடுவிக்கும்வரை போர் தொடரும்” என்றார்.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in