50 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியக்கூடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

50 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியக்கூடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Updated on
1 min read

இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு அழியக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இது தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் 19 பருவ நிலைகள் உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களில் பருவ நிலைகளில் ஏற்படும் மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிய உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு காலநிலை மாறுபாட்டால் மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர். ஆனால் விலங்குகளாலும் , தாவரங்களாலும் அவ்வாறு இடம்பெயர முடியாததால் அவை அழிவைச் சந்திக்கின்றன. மேலும், வெப்பநிலை அதிகரிக்கும்போது தாவரங்களால் தாங்க முடிவதில்லை. இதன் காரணமாக அவை அழிவைச் சந்திக்கின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு, சுமார் 10 வருட இடைவெளியில் 581 இடங்களில் உள்ள 538 உயிரினங்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்ற விளைவுகளைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in