

பாகிஸ்தானின் கராச்சியில் இனம்புரியாத நச்சு வாயுக் கசிவுக்கு மேலும் 4 பேர் பலியாக மொத்தமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ள நிலையில் அதிகாரிகளும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4 பேர் மேலும் பலியானதைத் தொடர்ந்து கராச்சியில் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி பரவி வருகிறது, காரணம் கராச்சி அரசு எங்கிருந்து இந்த நச்சு வாயு கசிகிறது என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த வாயுவின் தன்மை என்னவென்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வாசனை எதுவுமற்ற இந்த நச்சு வாயு கராச்சி கடற்கரை நகரமான கமாரியில் ஞாயிறு இரவு கசியத் தொடங்கியது. இதனையடுத்து திடீரென மக்களுக்கு பயங்கர மூச்சுத் திணறல் ஏற்பட மக்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக விரைந்தனர்.
இதனையடுத்து கமாரியிலிருந்து இன்று இரவுக்குள் பெரும்பாலோனரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அரசு முடிவெடுத்துள்ளது. சுமார் 150 பேர் இன்றும் மருத்துவமனைக்கு மூச்சுத் திணறல் காரணமாக விரைந்துள்ளனர், இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை சுமார் 650 பேருக்கு சிகிச்சை அளித்திருப்பதாக கமாரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகத்திற்கு வந்து இறங்கிய ஷிப்பிங் கண்டெய்னர்களிலிருந்து நச்சு வாயு கசிகிறதா என்பதையும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
கராச்சியில் நச்சு வாயுவுக்குப் பாதிக்கப்பட்ட பாபர் பஹதூர் என்பவர் ஏ.பி. செய்தி ஏஜென்சிக்குத் தெரிவிக்கும் போது, “என்னுடைய இருதயம் திடீரென படபடவென அடித்துக் கொண்டது. கண்கள் எரிந்தன, நெஞ்சு வலி ஏற்பட்டது, பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டதையடுத்து பரவாயில்லை” என்றார்.