Published : 17 Feb 2020 07:53 PM
Last Updated : 17 Feb 2020 07:53 PM

1981-லேயே கொலைகார கரோனா வைரஸை கணித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவலாசிரியர் டீன் கூண்ட்ஸ்

சீனாவை மட்டுமல்லாது உலகையே உலுக்கி வரும் புதிர் ‘நாவல்’ கரோனா வைரஸை அமெரிக்க நாவலாசிரியர் டீன் கூண்ட்ஸ் தன் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவலான “தி அய்ஸ் ஆஃப் டார்க்னெஸ்” (The Eyes of Darkness) என்ற நாவலில் கணித்திருப்பதான தகவல் வைரலாகி வருகிறது.

கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா விழிபிதுங்கி வரும் நிலையில் தினமுமே சுமார் 100 பேர் மரணமடைந்து வருகின்றனர். சார்ஸையெல்லாம் தாண்டிச் சென்று விட்டது கரோனா.

இந்நிலையில்தான் 1981-ல் அமெரிக்க நாவலாசிரியர் டீன் கூண்ட்ஸ் என்பவர் தன் ‘தி அய்ஸ் ஆஃப் டார்க்னெஸ்’ என்ற நாவலில் கரோனாவை முன்னரே கணித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நாவலில் தற்போதைய கரோனா வைரஸ் மையமான வூஹான் கதைக்கள மையமாக்கப்பட்டுள்ளது. நாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் - 400 என்பதாகும்.

இந்த நாவலில் இந்த வைரஸை ‘துல்லிய ஆயுதம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, காரணம் இது மனிதர்களை மட்டுமே கொல்லக்கூடியது. மனித உடலுக்கு வெளியே ஒரு நிமிடம் கூட இந்த நாவல் தாக்குப் பிடிக்க முடியாது.

இப்படி ஒரு நாவலில் வூஹான் 400 என்ற வைரஸ் பற்றிக் கூறியிருப்பதாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் நாவலின் அட்டைப்படம், மேற்கோள் உள்ளிட்டவையுடன் வெளியிட அது வைரலானது. இந்தத் தற்செயல் தற்போது இந்த எழுத்தாளர் டீன் கூண்ட்ஸை தீர்க்கதரிசி அளவுக்கு உயர்த்தியுள்ளது.

தன் மகனுக்கு என்னவாகியிருக்கும் என்று கவலைப்படும் ஒரு தாயாரின் கதைதான் இந்த நாவல். மகனின் பெயர் டேனி.

இந்த நாவலின் ஒரு பத்தியைப் படித்தால் முதுகுத்தண்டு சில்லிட்டு விடும்:

“அந்த காலக்கட்டத்தில் லீ ஷேன் என்ற விஞ்ஞானி சீனாவின் முக்கியமான, அபாயகரமான புதிய உயிரியல் ஆயுதம் குறித்த தரவு அடங்கிய ஃபிளாப்பி டிஸ்குடன் அமெரிக்காவுக்குச் சென்றார். இதனை வூஹான் 400 என்று அழைக்கின்றனர். வூஹானுக்கு வெளியே உள்ள ஆர்.டி.என்.ஏ. சோதனைச்சாலையில் இந்த உயிரியல் ஆயுதமான கிருமியை தயாரித்துள்ளனர்” என்று எழுதுகிறார் கூண்ட்ஸ்.

சீனாவில் தற்போது வைரஸின் ஆதார மையமான வூஹானில்தான் மைக்ரோபயாலஜி, வைராலஜி போன்றவற்றை ஆய்வு செய்யும் உயர்பாதுகாப்பு மண்டல விஞ்ஞான ஆய்வு மையங்கள் உள்ளன.

இந்த நாவலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அதிசயமாக, வியத்தகு முறையில் தற்போது சீனாவில் நடப்பதுடன் ஒத்துப் போவதாக அமைந்துள்ளது என்று இந்த நாவலைப் பற்றி பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x