Last Updated : 16 Feb, 2020 03:33 PM

 

Published : 16 Feb 2020 03:33 PM
Last Updated : 16 Feb 2020 03:33 PM

ஐ.நா. பொதுச்செயலர் பாக். வந்தார்: ஆப்கன் அகதிகள் பிரச்சினை குறித்த விவாதிக்க திட்டம்

ஆப்கன் அகதிகள் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, கர்த்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப் கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களில் பங்கேற்க இன்று காலை ஐ.நா. சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குடரெஸ் பாகிஸ்தான் வந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி முனீர் அக்ரம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள வெளியுறவு அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகள் நூர் கான் விமான தளத்திற்கு வந்தபோது அவரை வரவேற்றதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் ஞாயிற்றுக்கிழமை நான்கு நாள் பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருடன் குடெரெஸ் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த சந்திப்புகளின் போது, ​​காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு (யு.என்.எச்.சி.ஆர்) ஏற்பாடு செய்துள்ள 'பாகிஸ்தானில் 40 ஆண்டுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள்' என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார். இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டை திங்கள்கிழமை பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைக்கிறார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் இளைஞர்களையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

இப்பயணத்தில் லாகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அன்டோனியோ குடரெஸ் நாட்டின் நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் அமைதி காத்தல் ஆகிய கருப்பொருள்கள் குறித்து சிறப்பு பேச்சுக்களை வழங்குவார்..

இது தவிர, கர்த்தார்பூரில் உள்ள சீக்கிய மத நிறுவனர் குரு நானக் தேவின் இறுதி ஓய்வு இடமான குருத்வாரா தர்பார் சாஹிப்பையும் அவர் பார்வையிடுகிறார். குரு நானக் தேவ் தனது வாழ்க்கையின் கடைசி 18 ஆண்டுகளை கர்த்தார்பூர் சாஹிப்பில் கழித்தார், உலகின் மிகப்பெரிய சீக்கிய குருத்வாராவாக மாறியுள்ள இத்தலத்தில் சமீபத்தில் இந்திய யாத்ரீகர்கள் மீது வன்முறை சம்பவங்களும் நடந்தன.

இவ்வாறு வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x