Last Updated : 11 Aug, 2015 10:46 AM

 

Published : 11 Aug 2015 10:46 AM
Last Updated : 11 Aug 2015 10:46 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 3

வங்காளத்தின் நவாபாக விளங்கிய ஷெயிஷ்டா கான் பிரிட்டிஷ் படைகளை ஹுக்ளியிலிருந்தும், பலேஷ்வரி லிருந்தும் ஓட ஓட விரட்டினார். ஆங்கிலே யரின் கடற்புறத் தாக்குதல் தோல்வியை அடைந்தது.

பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனி வங்காள அரசை அணுகியது. ‘‘நாங்கள் ஒன்றும் இங்கு வந்த போர்ச்சுக்கீஸியர்கள் போல அரசுப் பிரதிநிதிகள் இல்லை. நாங்கள் ஒரு வணிக நிறுவனம் அவ்வளவுதான். உங்களோடு வியாபாரம் செய்தால் இருதரப்புக்குமே நல்லதுதானே’’ என்று நைச்சியமாகப் பேசினார்கள். வங்காள அரசு ஒப்புக் கொண்டவுடன் உடனடியாக தங்கள் வணிக நிறுவனத்தை கொல்கத்தாவில் 1690ல் நிறுவினார்கள்.

நாளடைவில் முகலாய சாம்ராஜ்யம் தன் முக்கியத்துவத்தை மெல்ல மெல்ல இழந்தது. ‘இனி உள்ளூர் ஆட்கள்தான் எங்களை ஆட்சி செய்யலாம்’ என்று மக்கள் உறுதியாக இருக்க, நவாப்புகள் வங்காளத்தை ஆளத் தொடங்கினர்.

அப்போது வங்காளத்தில் ஆங்காங்கே உள்ள நிலத் திட்டுகளில் பிரிட்டிஷாரும் தங்கி இருந்தனர் - கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில். நவாப் புக்கு இது பிடிக்கவில்லை. என்ன இருந்தா லும் இவர்களால் தனது ஆட்சிக்கு ஆபத்து நேரும் என்று எண்ணினார். தங்கள் எல்லைக் குள் இருந்த ஆங்கிலேயர்கள் வசித்த பகுதிகளின்மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் கிழந்திந்தியக் கம்பெனியில் குமாஸ்தாவாகச் சேர்ந்து பின்னர் ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் கண்டிருந்த ராபர்ட் கிளைவால் இதை ஏற்க முடியவில்லை. நவாபை எதிர்த்து தாக்குதலை நடத்தினார். . அடுத்த ஒரு வருடத்தில் கல்கத்தா கிளைவின் வசமானது.

ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வங்காளத்தில் வணிகம் பாதிக்கப்பட வில்லை. மூங்கில், கரும்பு, தேயிலை, பருத்தி, மசாலாப் பொருட்கள், சணல் போன்றவை டாக்கா, ராஜ்சஹி போன்ற பகுதிகளில் விளைச்சல் செய்யப்பட்டு ஏற்றுமதியானதைத் தொடர்ந்து, ஹுக்ளி ஒரு மிக பிஸியான துறைமுகமானது.

இதனிடையே சிப்பாய்க் கலகம் போன்ற கலவரங்களைத் தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது பிரிட்டிஷ் அரசு. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசே தனது நேரடி ஆட்சியைத் தொடங்கியது.

பிரிட்டிஷ் ராஜ் என்ற பெயரில் இந்தியாவை ஆட்சி செய்யத் தொடங்கிய பிரிட்டன் தனது ஆட்சியை பதினேழு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டது. அவற்றில் வங்காளம் ஒரு முக்கியப் பகுதியானது. வைஸ்ராய் என்ற பதவியில் தனது பிரதிநிதியை நியமித்து வங்காளத்தை ஆட்சி செய்யத் தொடங்கியது.

கல்கத்தாவை மேலும் வளம் மிக்கப் பகுதியாக மாற்றிக் காட்டியது பிரிட்டன். ஆனால் இந்த வளத்தின் பெரும் பங்கு லண்டனை நோக்கிதான் சென்றது.

ஆனால் வங்காளத்தின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அடுத்தடுத்து இரண்டு மாபெரும் பஞ்சங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது வங்காளத்துக்கு.

பிரிட்டிஷ் ஆட்சி வங்காளத்தில் இருந்த மைனாரிட்டி இந்துக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் அங்கிருந்த முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையேயான நேரடி உரசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன.

அங்கு வசித்த இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், ஆங்கில மொழியைக் கற்கவும் முன்வந்தனர். ஆனால் முஸ்லிம்கள் இப்படி ஒத்துழைக்க மறுத்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலை தோன்றியது.

1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்துவிட பிரிட்டன் தீர்மானித்தது. ஆனால் வங்காளத்தில் குழப்பநிலையே நீடித்தது. சுயாட்சி வேண்டுமென்று அங்குள்ளவர்கள் விரும்பினாலும் மதத்தின் அடிப்படையில் அவர்கள் பிளவுண்டிருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உண்டாவது நடக்காத ஒன்று என்று தீர்மானித்த பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தது. மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம்.

வணிக ரீதியாகப் பார்த்தால் பெரும் பாலான விவசாயப் பொருட்கள் விளைச்சல் கண்டது முஸ்லிம்கள் அதிகம் உள்ள டாக்கா பகுதியில். ஆனால் அந்தப் பொருட்கள் பக்கு வப்படுத்தப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட் டது இந்துக்களை அதிகம் கொண்ட மேற்குப் பகுதியில். இந்த இரண்டு பகுதிகளுக்கு மிடையே அடிக்கடி சண்டைகள் மூண்டன.

பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனி நாடாகியது. அந்த பாகிஸ்தானின் ஒரு பகுதியாக்கப்பட்டது கிழக்கு வங்காளம் அப்போது அதன் பெயர் கிழக்கு பாகிஸ்தான் என்றானது. பின்னாளில் பங்களாதேஷாகப் பெயர் சூட்டிக் கொண்டது அந்தப் பகுதி!

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x