Last Updated : 16 Feb, 2020 11:34 AM

 

Published : 16 Feb 2020 11:34 AM
Last Updated : 16 Feb 2020 11:34 AM

ஒரே நாளில் 142 பேர் பலி: சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1665 ஆக அதிகரிப்பு

சீனாவில் நேற்று ஒரேநாளில் கரோனா வைரஸ் பாதிப்பால் 142 பேர் உயிரிழந்தனர், இதனால், இந்த கொவிட்-19 வைரஸின் தாக்குதலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1,665 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஹூபே மாகாணத்தில்தான் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார இயக்கத்தின் அறிக்கையின்படி அந்நாடு முழுவதும் புதிதாக 2 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இருந்துதான் கரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியது. தொடக்கத்தில் 1,843 பேர் மட்டும் இந்த ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இப்போது, 56 ஆயிரத்து 249 பேர் இந்த வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஹூபே மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 139 பேரும், சிச்சுவான் நகரில் 2 பேரும், ஹூனான் நகரில் ஒருவரும் இறந்துள்ளனர்.

ஆனால், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூற்றுப்படி, கரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 9 ஆயிரத்து 419 நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 1,700 மருத்துவ ஊழியர்கள் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதால், சிறிது காலத்துக்குச் சீனாவில் இருந்து எந்த சுற்றுலாப் பயணிகளையும் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தடை செய்ய ஏராளமான நாடுகள் முடிவு செய்துள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரச் சீனாவுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பும் களத்தில் இறங்க உள்ளது.

சீனாவில் உள்ள உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் ஹாங் ஜின்மின் கூறுகையில், " கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது குளோரோகுயின் பாஸ்பேட், பாவிபிராவிர், ரெம்டெஸிவிர், ஹாங் ஜின்மின் ஆகியோ மருத்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மக்கள் அடிக்கடி கைகளைக் கழுவவும், மருத்துவர்கள் அடிக்கடி சுவாசக் கவசத்தை மாற்றமும் அறிவுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x