பருவநிலை மாறுபாட்டால் 2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிந்துவிடும்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பருவநிலை மாறுபாட்டால் 2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிந்துவிடும்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்
Updated on
1 min read

பருவநிலை மாறுபாட்டால் 2070-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிவைச் சந்திக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிறிஸ்டியன் ரோமன் பலாசியோஸ் கூறும்போது, “பருவநிலை மாறுபாடுகளால் உலகில் உள்ள தாவரங்கள், விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு வரும் 2070-ம் ஆண்டுக்குள் அழியும் நிலை ஏற்படும்.

வெவ்வேறு பருவநிலைகள் உள்ள 19 இடங்களில் ஆய்வு செய்து பார்த்ததில் ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரில் அழிவை ஏற்படுத்துவது எது என்பதைக் கண்டறிந்தோம்.

ஓரிடத்தில் பருவநிலை மாறுபாடு அடையும்போது அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து விடுகிறார். ஆனால் தாவரங்கள், விலங்கினங்களால் அவ்வாறு இடம் பெயர முடியாத நிலை உள்ளது.

581 இடங்களில் உள்ள 538 தாவர இனங்கள் குறித்து கடந்த10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை நடத்தினர். அப்போது பருவநிலை மாறுபாட்டால் அந்த 538 தாவர இனங்களில் சுமார் 44 சதவீதம் அழிந்து விட்டது என்பது ஆய்வில் தெரியவந்தது” என்றார்.

இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர் ஜான் ஜே. வெயின்ஸ் கூறும்போது, “அதிகமான வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை ஆகிய 2 வெப்பநிலை மாறுபாட்டின்போதும் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது வெப்பநிலை அதிகமாகும்போது ஓர் எல்லை வரை மட்டுமே அந்தவெப்பத்தை அந்தத் தாவர இனங்கள் தாக்குப்பிடிக்க முடிகின்றன என்பதும் தெரியவந்தது.

உலகம் அடிக்கடி பருவநிலை மாறுபாட்டைச் சந்தித்து வருகிறது. பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு தொடர்பான உச்சி மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.

அதை நாம் பின்பற்றினால் உலகில் உள்ள 10 தாவர, விலங்கினங்களில் நாம் 2-ஐ வரும் 2070-க்குள் இழக்கும் அபாய நிலை வரலாம்.

வெப்பநிலை குறைவதற்கும், அதிகரிப்பதற்கும் மனிதர்கள் காரணமாக அமைந்தால் 2070-க்குள் உலகில் உள்ள தாவர, விலங்கினங்களில் 3-ல் ஒரு பங்கை இழந்துவிடுவோம். எங்கள் ஆய்வு முடிவுகள் அதைத்தான் தெரிவிக்கின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in