சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1523 ஆக அதிகரிப்பு

சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1523 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சீனாவில் கோவிட் - 19 (கரோனா)க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 66,492 பேர் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சீனாவில் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) பாதிப்பில் வெள்ளிக்கிழமை 139 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சுமார் 66, 492 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8,096 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in