

சட்டவிரோதமாக கடலில் பயணித்த 48 ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மர் கடற்படை கைது செய்துள்ளது.
இதுகுறித்து மியான்மரின் உள்ளூர் கடற்படை அதிகாரிகள் தரப்பில், “கடல் வழியாக சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற சிறுபான்மையின ரோஹிங்கியாக்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அவர்கள் எங்கிருந்து தங்கள் கடல் பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மலேசியா அல்லது இந்தோனேசியா செல்லத் திட்டமிட்டிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் அங்கிருந்து தப்பி , வங்கதேச முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிலர் மலேசியா போன்ற நாடுகளுக்கு கடல் வழியாகத் தப்பிச் செல்லும்போது விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சி உலக அரசியலில் விமர்சிக்கப்பட்டார்.