

கரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் உள்ளவர்கள் காதலர் தினப் பதிவுகளை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின்
யோககாமா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்தடைந்தது. இதில் 3,000க்கும் அதிகமான பயணிகள் உள்ளனர்.
அண்மையில் சீனா சென்று திரும்பிய இந்தக் கப்பலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் யோககாமா துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இதில் 200 பேருக்கு மேல் கோவிட்-19 (கரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டைமண்ட் பிரிசன்ஸ் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) உலககெங்கிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அக்கப்பலில் உள்ள மேலாளர் நடாலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் சிவப்பு நிற உடையுடன் பேசும் நடாலி, “நாங்கள் அனைவரும் இங்குதான் ஒன்றாக இருக்கிறோம். எல்லோரும் நலமுடன் உள்ளோம். நாங்கள் பெரிய குடும்பமாக இருக்கிறோம் என்று கூற விரும்பினேன்” என்றார் புன்னகையுடன் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், டைமண்ட் பிரிசன்ஸ் கப்பலில் இருந்த பலரும் தங்களது அனுபவத்தை அவர்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.