Last Updated : 14 Feb, 2020 01:00 PM

 

Published : 14 Feb 2020 01:00 PM
Last Updated : 14 Feb 2020 01:00 PM

'நான் கைகூப்பிக் கேட்கிறேன்; தயவுசெய்து உங்களின் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்': வங்கிகளிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்

தயவுசெய்து இந்திய வங்கிகள் என்னிடம் கடனாகக் கொடுத்த பணத்தை 100 சதவீதம் திருப்பி எடுத்துக் கொள்ளட்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தப்பிச் சென்றார்.

அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். ஆனால், அரை மணிநேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா தரப்பில் வழக்கறிஞர் கிளாரே மான்ட் கோமரி ஆஜரானார். அதேபோல, இந்திய அரசுத் தரப்பில் கிரவுன் வழக்கறிஞர்கள் சேவை நிறுவனத்தின் சார்பில் மார்க் சம்மர்ஸ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பிலும் காரசாரமாக ஆதாரங்களை முன்வைத்து வாதிட்டனர்.

இந்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்மர்ஸ் வாதிடுகையில், "மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக 32 ஆயிரம் பக்க ஆவணங்கள், ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். வங்கிகளிடம் பொய் கூறி கடன் பெற்றுள்ளார், கடனாகப் பெற்ற பணத்தை அவர் திருப்பிச் செலுத்தவும் மறுத்துவிட்டார். இது நேர்மையற்ற செயல்" என வாதிட்டார்.

இந்த வாதங்கள் நடந்தபோது அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள், இந்தியத் தூதரக அதிகாரிகள் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஸ்டீபன் இர்வின், எலிசபெத் லயங் ஆகியோர் எழுத்துபூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்பின் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து நிருபர்களுக்கு விஜய் மல்லையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " நான் கைகூப்பி பணிவுடன் கேட்கிறேன். இந்திய வங்கிகள் தயவுசெய்து, 100 சதவீதம் என்னிடம் அளித்த பணத்தை உடனடியாகத் திரும்ப எடுத்துக் கொள்ளட்டும்.

நான் பணத்தைத் திருப்பிச் செலுத்தமாட்டேன் என்பதால், வங்கிகள் புகாரின் பெயரில் அமலாக்கப் பிரிவு என்னுடைய சொத்துகளை முடக்கி வைத்துள்ளன. சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால், அமலாக்கப் பிரிவு தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

வங்கிகள் தயவுசெய்து பணத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறினாலும், அமலாக்கப் பிரிவு மறுக்கிறது. ஒரே சொத்துக்காக அமலாக்கப் பிரிவும், வங்கிகளும் சண்டை போடுகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் செயல்பட்ட முறை, நடந்து கொண்ட முறை அனைத்தும் அநீதியானது. எந்தவிதமான காரணமும் இன்றி செயல்பட்டன" என விஜய் மல்லையா தெரிவித்தார்.

எப்போது இந்தியா வருவீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு விஜய் மல்லையா கூறுகையில், " எனது குடும்பம் எங்கு இருக்குமோ, அங்குதான் என்னுடைய நலனும் இருக்கும். அங்குதான் நான் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x