

இந்தியா செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலானியா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24-ம் தேதி, 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் அவரது மனைவி மெலானியாவும் வருகிறார்.
இந்திய பயணம் குறித்து மெலானியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த மாத இறுதியில் இந்திய தலைநகர் டெல்லி, அகமதாபாத்துக்கு செல்ல இருக்கிறேன். இந்தியா செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அமெரிக்கா, இந்தியா இடையிலான நட்புறவை கொண்டாடுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. மேலும் அமெரிக்காவின் அதிநவீன ‘எப்-15 இ.எக்ஸ். ஈகிள்' போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க போயிங் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.