

பாகிஸ்தான் ராணுவ சிறையிலிருந்து தப்பிச் சென்ற தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஈசானுல்லா இஷான் ராணுவ சிறையிலிருந்து தப்பிச் சென்றதை அடுத்து பாகிஸ்தானில் வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது
தப்பிச் சென்ற ஈசானுல்லா இஷான், மலாலா மீதான துப்பாக்கிச் சூடு, பெஷாவர் ராணுவப் பள்ளி மீதான தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றவர். இவர் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவ சிறையிலிருந்து தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் ” கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளிடம் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சரணடைந்தேன். ஆனால், சிறையில் பாகிஸ்தான் அதிகாரிகள் என் மீது அத்துமீறி நடந்து கொண்டார்கள்.
நான் தற்போது என் குடும்பத்தினருடன் துருக்கியில் இருக்கிறேன்” என்று வீடியோ ஒன்றை அவர் கடந்த வாரம் வெளியிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்த நிலையில் பெஷாவர் ராணுவ பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களின் பெற்றோர்கள் ஈசானுல்லா இஷான் தப்பி சென்றதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியையும் அவர்கள் நாடி உள்ளனர்.
பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 140 பேர் பலியாகினர்.