பேச்சுவார்த்தை ஒருபக்கம்; ஆயுத படைகள் மறுபக்கம்: வட - தென் கொரியா பரஸ்பர குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தை ஒருபக்கம்; ஆயுத படைகள் மறுபக்கம்: வட - தென் கொரியா பரஸ்பர குற்றச்சாட்டு
Updated on
1 min read

எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்திருக்கும் வடகொரியா மன்னிப்பு கோரும் வரை பேச்சுவார்த்தைக்கு அர்த்தம் ஏற்படாது என்று தென்கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வட மற்றும் தென்கொரிய எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தை 3 நாட்கள் நீடித்தும் பலனில்லாமல் போனது. தென் கொரிய எல்லையில் கண்ணிவெடிகளை வட கொரியா புதைத்திருந்ததாகவும், அதில் 2 தென்கொரிய வீரர்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தமது வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளன.

கண்ணிவெடிகளை புதைத்த குற்றத்துக்கு வடகொரியா மன்னிப்பு கேட்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை என்று தென் கொரிய அதிபர் பார்க் கூயின் ஹை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தாக்குதலில் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூறி வடகொரியா, மன்னிப்பு கோர மறுத்துவிட்டது.

வடகொரியா - தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு நடுவிலும், வடகொரிய பகுதியில் வழக்கத்தை மீறிய படைகளும் நீர்மூழ்கிக் கப்பல்கள்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்துகொண்டு வீண் பேச்சுவார்த்தை நடத்தும் போக்கை வட கொரியா கடைபிடிப்பதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. அவர்களது படைகளை எதிர்க்கும் போக்கில் தென்கொரியாவும் படைகளை குவித்துள்ளது.

அத்துடன், சனிக்கிழமை உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர், எல்லையில் பீரங்கி படை பலத்தை இரட்டிப்பாக வடகொரியா உயர்த்தியுள்ளதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக, இருத் தரப்பும் பின்வாங்கும் போக்கில் இல்லாததால், பேச்சுவார்த்தையும் படை குவிப்புமாக கொரிய எல்லையில் தொடர்ந்து பதற்றச் சூழல் நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in