

துருக்கி ராணுவ வீரர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குகுதல் நடத்தினால் சிரியாவில் எங்கு வேண்டுமானலும் தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார்.
சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில் அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 துருக்கி ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து துருக்கி உடனடியாக பதிலடி அளித்தது. இந்த நிலையில் துருக்கி ராணுவ வீரர்கள் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி நாடாளுமன்றத்தில் எர்டோகன் பேசும்போது, “எங்கள் ராணுவ வீரர் மீது மீண்டும் சிரியா தாக்குதல் நடத்தினால் சிரிய அரசுப் படைகள் மீது எங்கு வேண்டுமானலும் துருக்கி தாக்குதல் நடத்தும். அது வான்வழித் தாக்குதலாகவும் இருக்கலாம், தரைவழித் தாக்குதலாகவும் இருக்கலாம்” என்றார்.
முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால் அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.