

ஜப்பானின் ஒக்காஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சுமார் 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் ஒக்காஹாமா துறைமுகத்தை பிப்.3-ம் தேதி வந்தடைந்தது.
அண்மையில் சீனா சென்று திரும்பிய இந்தக் கப்பலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் ஒக்காஹாமா துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அதன்படி முதலில் 60 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தொடர் பரிசோதனைகளில் 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடந்து கப்பலில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முடிவுகள் பின்னர் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 44,653 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,000க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.