

சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்த நிலையில், பதில் தாக்குதல் நடத்தியுள்ளது துருக்கி.
இதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், “சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில் அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 துருக்கி ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து துருக்கி உடனடியாக பதிலடி அளித்தது. எதிரிகளின் நிலைகள் தாக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு சிரியா தரப்பில் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றினர்.
இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால் அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.