

மிகப்பெரிய பூகம்பத்தினால் சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை மறுகட்டுமானம் செய்ய இந்தியா அளித்த ரூ.3.9 கோடி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள் நேபாளத்தில் திறக்கப்பட்டன.
நேபாள மக்கள் மனதில் நீங்காத் துயராக முடிந்த அந்த 8.1 ரிக்டர் அளவு பூகம்பம் ஏப்ரல் 25, 2015 அன்று நேபாளையே புரட்டிப் போட்டது, சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர் 22,000 த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகிப் போனது.
இடில் ஐசெலுபூம் மேனிலைப் பள்ளியும் கடுமையாகச் சேதமடைந்தது. இந்தப் பள்ளிக்கட்டிடத்தை மறுகட்டுமானம் செய்ய இந்தியா ரூ.3.9 கோடி நிதியுதவி அளித்தது.
இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களை நேபாள் முன்னாள் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனுமான புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா திறந்து வைத்தார்.
எரிவாயு, மற்றும் நீராதார அமைச்சர் பர்சமன் பன் இதில் கலந்து கொள்ள, இந்தியாவின் பிரதிநிதியாக சுசித்ரா கிஷோர் என்ற தூதரக அதிகாரி கலந்து கொண்டார்.
1990ம் ஆண்டு உருவான ஐசெல்பூம் மேனிலைப் பள்ளி நேபாளத்தின் தேசிய தேர்வு வாரியத்தைச் சேர்ந்தது. இங்கு சுமார் 637 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய கட்டுமானங்களில் 6 வகுப்பறைகள் அடங்கிய 3 மாடி அகாடமிக் கட்டிடம், 4 வகுப்பறைகள் அடங்கிய 2 மாடிக் கட்டிடம் ஆகியவை திறக்கப்பட்டன, தனித்தனியான பர்னிச்சர்கள், மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே கழிப்பறை வசதிகள் ஆகியவை அடங்கும்.