

வடக்கு சிரியாவில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “சிரியாவின் வடக்குப் பகுதியில் அலெப்போ மாகாணத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறினால் எங்களிடம் பிளான் பி, பிளான் சி என்று பல திட்டங்கள் உள்ளன என்று துருக்கி மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.
கடந்த இரு மாதங்களில் சிரியாவில் நடக்கும் வன்முறை காரணமாக சுமார் 50,000 பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.