

மோதல் அதிகரித்துள்ள சூழலில் எங்களிடம் பிளான் பி இருக்கிறது என்று சிரியாவுக்கு துருக்கி மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் கூறும்போது, ” சிரியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மீறபட்டால் எங்களிடம் பிளான் பி, பிளான் சி என்று பல திட்டங்கள் உள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி அதன் திட்டத்தை மாற்றும். எங்களின் கண்காணிப்பு தளங்கள் முன் இருந்த அதே பகுதியில் இருக்க வேண்டும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கியின் மிரட்டலை தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
முன்னதாக சிரியா அரசுப் படைகள் ரஷ்ய படை உதவியுடன் சிரியாவின் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் முக்கிய பகுதியான கிழக்கு பகுதியை கைபற்றினர்.
இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால் அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.
கடந்த இரு மாதங்களில் சிரியாவில் நடக்கும் வன்முறை காரணமாக சுமார் 50,000 பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.