

அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது அல்காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கட்டிடம் தரைமட்டமானதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு, அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அல் காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்தது. இதில் அல் காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக தனது ராணுவ வீரர்களை அமெரிக்கா வாபஸ் பெற்று வருகிறது. அதேநேரம், அங்கு ஆப்கன் அரசுக்கு தலைவலியாக உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நங்கர்ஹார் மாகாணம் ஷெர்ஜாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஆப்கன் ராணுவ சீருடை அணிந்த ஒருவர் அங்கிருந்த ஆப்கன் - அமெரிக்க வீரர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாகாண ஆளுநர் ஷா முகமது மெயாகில் கூறும்போது, “இது இரு நாட்டு படை வீரர்களுக்கிடையே நிகழ்ந்தமோதல் சம்பவம் அல்ல. வெளியாட்கள் யாரேனும் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.