

தாய்லாந்தின் நகாந் ரட்சாசிமாநகரில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியானார்கள். 17 மணிநேர போராட்டத்துக்குப்பின் அந்த ராணுவ வீரரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பாங்காக் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள கோரத் நகரில்தான் இந்த சம்பவம் நடந்தது. தாய்லாந்து ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் ஜக்ராபந்த் தோமா. இவர் நேற்று ராணுவ ஆயுத பாதுகாப்பு கிடங்கிற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை தாக்கி விட்டு ஒரு எந்திரத் துப்பாக்கியை திருடிக் கொண்டு, ராணுவ வாகனத்தில் மக்கள் நடமாட்டம் இருக்கும் கோரத் நகரப் பகுதிக்கு வந்துள்ளார்.
கோரத் நகரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு காரில் வந்த ஜக்ராபந்த் தோமா, சாலையில் சென்றவர்கள் மீதும், ஷாப்பிங் மாலுக்குள் என்று அங்கிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார்.
தோமா துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்தும், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டும் மாலில் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தனர். பலர் கடைகளுக்குள் புகுந்து பதுங்கிக்கொண்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தபட்சம் 27 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து ஷாப்பிங் மாலில் உள்ள தரைதளத்தில் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன்பின் ராணுவ வீரர் தோமாவைத் தேடும் முயற்சியில் ஏற்பட்ட சண்டையில் அவரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காங்செப் தந்தராவனிச் கூறுகையில், " இந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் 27 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 10 பேர் நிலைமை மோசமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் ராணுவ வீரர் தோமா தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து பதிவுகளை இட்டுள்ளார். மேலும், மரணத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் பதிவுகளை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் கொல்லப்பட்டபின் அவரின் பேஸ்புக் பக்கத்தினை ராணுவ அதிகாரிகள் நீக்கிவிட்டனர்.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறுகையில், " ராணுவ வீரர் மனநலம் சார்ந்த பிரச்சினையால் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டார்கள். தாய்லாந்தில் இதுவரை நடந்திராத சம்பவம்" எனத் தெரிவித்தார்