

சிரியாவில் ஈரான் ஆதரவாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் டமாஸ்கஸ் அருகே ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரிய ராணுவம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம்
தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 23 பேர் பலியாயினர். அவர்களின் ஆயுதக் கிடங்குகளும் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் ஈரானின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சிரியாவில் சில வருடங்களாகத் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.
கடந்த இரு மாதங்களில் சிரியாவில் நடக்கும் வன்முறை காரணமாக சுமார் 50,000 பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.