Published : 06 Feb 2020 01:16 PM
Last Updated : 06 Feb 2020 01:16 PM

ட்ரம்ப் மீதான பதவிப் பறிப்புத் தீர்மானம்: செனட் சபையில் தோல்வி

அமெரிக்காவின் செனட் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இவ்வருட இறுதியில் போட்டியிட உள்ளார் ஜோ பிடன். இதில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்துவிட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

இதையடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதல் கட்டமாக பிரதிநிதிகள் சபையில்
பதவி நீக்கக்கோரும் தீர்மானம் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 197 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்தார் என்ற இரண்டாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 229 பேரும்,
எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான இரண்டாவது தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்கும் தீர்மானம், செனட் சபையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்குத் தடையாக இருத்தல் ஆகிய இரு தீர்மானங்களும் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் செனட் சபையில் தோல்வி அடைந்தன.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் ட்ரம்ப்புக்கு ஆதரவு இருந்ததால் இந்த முடிவு எதிர்பார்த்ததே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x