

இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஜெருசலேமில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர்.
ட்ரம்பின் அமைதி திட்டம் தொடர்பாக பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் போலீஸார் கூறும்போது, “ஜெருசலேமின் மத்திய பகுதியில் பிரபல ஓட்டல்கள் உள்ள டேவிட் ரெமிஸ் சாலைக்கு அருகே வாகனத்தை ஓட்டி வந்த நபர் சாலையில் இருந்தவர்கள் மீது மோதியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வாகனத்தை ஓட்டி வந்தவரை தேடும் பணி முடக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காயம் அடைந்தவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இத்திட்டத்தை ''ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல'' என்று கூறி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தினம் இடையே மோதல் நீடிக்கிறது.