Published : 06 Feb 2020 07:03 AM
Last Updated : 06 Feb 2020 07:03 AM

சீனாவில் திருமணத்தை முடித்து பத்தே நிமிடங்களில் பணிக்கு திரும்பிய டாக்டர்

சீனாவில் கரோனா வைரஸால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 25,000-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் அதிவேகமாக வைரஸ் பரவி வருகிறது.

அந்த நாட்டை சேர்ந்த டாக்டர்கள், தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் சீனாவின் ஷான்டாங் மாகாணம், ஹெஜி நகரைச் சேர்ந்த டாக்டரும் ஒருவர். இவர் தனது பகுதி மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகிறார்.

அவருக்கு கடந்த ஜனவரி 30-ம் தேதி விமரிசையாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் திருமணத்தை தள்ளி வைக்குமாறு பெற்றோரிடம் டாக்டர் வலியுறுத்தினார். இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதன்படி கடந்த 30-ம் தேதி ஹெஜி நகரில் டாக்டருக்கும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது.

இந்த திருமண விழா 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. மணமக்களின் பெற்றோர் உட்பட 5 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் டாக்டர், மருத்துவ பணிக்கு திரும்பிச் சென்றுவிட்டார். புது மணப்பெண்ணுடன் சில வார்த்தைகள்கூட பேசவில்லை. ஒன்றாக அமர்ந்து சாப்பிடவில்லை. வீடியோ, புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

இதுகுறித்து மணப்பெண் கூறும்போது, “எனது கணவர் 10 நிமிடங்களில் என்னை பிரிந்துவிட்டார். இதில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும். கணவரின் கடமை, மனிதாபிமானத்துக்கு இடையூறாக இருக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x