

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆமீர் ரஹிம்பூரின் மரண தண்டனையை ஈரான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சி தொடர்பான ரகசியங்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவுக்கு அளித்ததாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஆமீர் ரஹிம்பூருக்கு மரண தண்டனையும் இதர 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஈரான் விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் ஈரான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆமீர் ரஹிம்பூரின் மரண தண்டனையும் இதர 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஈரான் நீதித்துறை செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் கூறும்போது, “ஆமீர் ரஹிம்பூருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்று அறிவித்தார்.
அவர் யார், என்ன வயது, சொந்த ஊர் குறித்த விவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆமீர் ரஹிம்பூர், தொண்டு நிறுவனத்தின் பெயரில் அமெரிக்காவின் சிஐஏவுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் அதற்காக சிஐஏ அவருக்கு பெருந்தொகை அளித்ததாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.