Published : 04 Feb 2020 02:57 PM
Last Updated : 04 Feb 2020 02:57 PM

முஷாரப் மரண தண்டனை ரத்துக்கு எதிராக பாக். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமாபாத்

பர்வேஸ் முஷாரப் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற தேசத்துரோக வழக்கின் முடிவில் டிசம்பர் 17, 2019 அன்று பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் 74 வயது முஷாரபுக்கு மரண தண்டனை விதித்தது.

நவம்பர் 2007-ல் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எமர்ஜென்சி பிரகடனம் செய்ததாக முஷாரப் மீது நவாஸ் ஷெரிப் தலைமை அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வந்த போது ஜனவரி 13ம் தேதி, சிறப்பு நீதிமன்ற உருவாக்கமே அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி முஷாரப் மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி மூத்த வழக்கறிஞர் ஹமித் கான் லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்த மரண தண்டனை தீர்ப்பை நிராகரிக்குமாறு மனு செய்துள்ளார்.

அவர் மேற்கொண்டுள்ள மனுவில், லாகூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்ததன் மூலம் அரசியல் சட்டப் பிரிவு 6 -ஐ செல்லுபடியாகதாகச் செய்து விட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசியல் சாசன வரலாற்றில் முக்கியத்துவம் உள்ளது என்று கூறியுள்ளார்.

லாகூர் உயர் நீதிமன்றம் தனது மரண தண்டனை ரத்து உத்தரவில் கூறும்போது, 1976ம் ஆண்டு சிறப்பு நீதிமன்ற குற்றச்சட்டத் திருத்தத்தின் படி அரசியல் சட்டத்துக்கு விரோதமான வகையில் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கம் நடந்துள்ளது என்று கூறியதோடு அரசியல் சட்டம் 6ம் பிரிவு என்பதற்குத் திருத்தம் அளித்து, அதன் மூலமாக அதற்கு முன்பாக நடந்த ஒன்றை தேசத்துரோகம் என்று கூற முடியாது என்று கூறி மரண தண்டனையை ரத்து செய்தது.

இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத்தான் தற்போது வழக்கறிஞர் ஹமித் கான் வழக்குத் தொடர்ந்து, மரண தண்டனை ரத்து உத்தரவை நிராகரிக்குமாறு முறையிட்டுள்ளார்.

அதாவது முஷாரப் ஏற்கெனவே தலைமறைவாகி விட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டுத் தகுதியையே அவர் இழந்து விடும்போது சிறப்பு நீதிமன்ற மரண தண்டனை உத்தரவை எதிர்த்து அவர் எப்படி உயர் நீதிமன்றத்தை அணுக முடியும்? என்று மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x