

கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஹாங்காங்கில் ஒருவர் பலியாகி இருக்கிறார். கரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இதுவாகும்.
இதுகுறித்து ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில், “ சீனாவின் வுஹான் நகரிலிருந்து வந்த 39 வயதான நபர் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும்.
முன்னர் பிலிப்பைன்ஸில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து வந்த 40 வயதை கடந்த நபர் ஒருவர் ஞாயிற்றுகிழமை மரணமடைந்தார்.
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த டிசம்பரில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக 425 பேர் பலியாகி உள்ளனர். சீனா முழுவதும் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,400ஐயும் கடந்துள்ளது.