

இலங்கையில் வரும் சுதந்திர தினம் முதல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும், தமிழ் மொழியில் பாடப்படாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை கொண்டுவரப்பட்டது.
ஆனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் சிங்கள சமூகத்தைப் பெருவாரியாகக் கொண்ட கோத்தபய ராஜபக்சவின் கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வரும் 72-வது சுதந்திர தினத்தில் இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இதை இலங்கை உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசியல் தலைவர் மனோ கணேசன் கூறுகையில், "இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது என்பது வேறு பாடல் ஒன்றும் இல்லை. இலங்கைத் தாயே என்ற சிங்கள மொழியில் இருப்பதை அப்படியே தமிழில் பாடுகிறோம். இது இலங்கையில் வாழும் தமிழர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே கடந்த வாரம் அளித்த பேட்டியில், "இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். ஆனால், பிராந்திய அளவில் தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்மொழியில் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி ஏற்பு விழாவில் பேசுகையில், "நான் அதிபராவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பவுத்தர்களின் ஆதரவுதான். இருப்பினும் அனைத்து சமூகத்தினரைக் காக்க நான் உறுதி ஏற்பேன். அதேசமயம் அதிகமான முக்கியத்துவம் பவுத்த மதத்துக்கு வழங்கப்படும். என்னைத் தேர்வு செய்த சிங்க மக்களுக்கு நன்றி" என்று சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார்.
ஏற்கெனவே அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் கூறி வரும் நிலையில், இப்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது மேலும், அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.