

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான் கலந்து கொள்ளாத வண்ணம் சவுதி அரேபியா சதி செய்துள்ளது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மவ்சாவி கூறும்போது, ''ஜெட்டாவில் திங்கட்கிழமையன்று இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக, மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவது தொடர்பாக ட்ரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட திட்டம் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் இக்கூட்டத்தில் ஈரானின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளாத வண்ணம் சவுதி சதி செய்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான விசாவை ஈரானின் பிரதிநிதிகளுக்கு சவுதி அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சவுதி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், ட்ரம்ப்பின் இத்திட்டத்தை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தை அச்சுறுத்தும் கனவு என்று ஈரான் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.