Published : 03 Feb 2020 07:46 AM
Last Updated : 03 Feb 2020 07:46 AM

இராக் பிரதமர் முகமது அல்லாவி: அதிபர் நடவடிக்கைக்கு பிறகும் தொடரும் போராட்டம்

இராக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிய பிரதமராக முகமது அல்லாவியை நியமித்து அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அவரை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்கிறது.

இராக்கின் அதிபராக பர்ஹம் சலேவும் பிரதமராக அடல் அப்துல் மஹ்தியும் பதவி வகித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. வேலையின்மை, ஊழல், பொது சேவைகளில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இராக் நிர்வாகத்தில் ஈரான் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. போராட்டக்காரர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான மோதல் சம்பவங்களில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டம் காரணமாக அப்துல் மஹ்தி கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதிக்குள் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மஹ்திக்கு அதிபர் கெடு விதித்திருந்தார். ஆனால் புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் முகமது அல்லாவியை புதிய பிரதமராக அதிபர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அல்லாவி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிபர் சலே என்னை புதிய பிரதமராக நியமித்துள்ளார். எனவே, புதிய அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கு முன்பாக உங்களுடன் (போராட்டக்காரர்கள்) பேச விரும்புகிறேன்” என்றார்.

இதுகுறித்து அதிபர் சலே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் அப்துல் மஹ்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல, இந்த நியமனத்தை மதபோதகரான (ஷியா) மக்ததா சாத் அங்கீகரித்துள்ளார். இவருக்கு நாடாளுமன்றத்தில் செல்வாக்கு உள்ளது. ஆனால், பெரும்பாலான போராட்டக்காரர்கள் அல்லாவியின் நியமனத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியான சற்று நேரத்தில் பாக்தாத் நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய போராட்டக்காரர்கள் அல்லாவிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x