Last Updated : 02 Feb, 2020 05:25 PM

 

Published : 02 Feb 2020 05:25 PM
Last Updated : 02 Feb 2020 05:25 PM

பயிர்கள் நாசம்: பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலை அறிவித்தது பாகிஸ்தான்

கடந்த டிசம்பர் அன்று இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் படையெடுத்துவந்த பாலைவன வெட்டுக்கிளிகள். | படம்: சிறப்பு ஏற்பாடு.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தையே அசைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவை பாலைவன வெட்டுக்கிளிகளின் தலைநகரம் எனலாம். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான் சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்திய எல்லைப் பகுதி வரை வந்து சேர்ந்துள்ளன .

பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் படையெடுத்துவந்த வெட்டுக்கிளிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதைக் குழந்தைகள் எடுத்து விளையாடும் காட்சி.

கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது பாகிஸ்தான். இது குறிப்பாக, பெரும்பாலும் குளிர்காலத்தில் பயிர்கள் நல்ல விளைச்சல் பருவத்தில் இருக்கும்போது கூட்டம் கூட்டமாகப் பறந்துவந்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டுப் போய்விடும். ஆனால் அது நாடு தழுவிய இழப்பை ஏற்படுத்தும் ஒரு சேதமாக இருந்ததில்லை.

அப்படி குளிர்காலத்தில் வரும் வெட்டுக்கிளிகள் சில காலம் கழித்து ஈரானுக்குச் சென்றுவிடுவதுண்டு, ஆனால் இந்த முறை குறைந்த வெப்பநிலை காரணமாக அவை இன்னும் பாகிஸ்தானிலேயே தங்கியுள்ளது குறித்து பாகிஸ்தான் விவசாயப் பயிர் பாதுகாப்புத்துறை பெரும் அச்சம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் கராச்சியில் மாலிர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வெட்டுக்கிளிகளின் வருகை உண்மையில் கோடை-பருவமழை இனப்பெருக்க மண்டலத்திலிருந்து பலுசிஸ்தானின் கரையோரப் பகுதிகளுக்கு இயற்கையானதொரு இடப்பெயர்வு என்றுதான் பாக். தாவர பாதுகாப்புத் துறை கருதியது.

பாலைவன வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறந்து இரவில் குடியேறுகின்றன என்றும், இனப்பெருக்கத்திற்கான ஒரு இடம்பெயர்வே தவிர உணவுத் தேடல் அல்ல, பயிர்களுக்குச் சேதம் விளைவிக்காது என்றுதான் துறையின் அதிகாரிகள் நம்பியிருந்தனர்.

எனினும், இந்த முறை தாவர பாதுகாப்புத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது/ தொழில்நுட்ப வழிகாட்டுதல்களின்படி தேவைப்பட்டால் பாலைவன வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு குழுக்கள் அதன் கட்டுப்பாட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால் அத்தனை அனுமானங்களையும் தாண்டி வெட்டுக்கிளிகள் அலை அலையாகப் பெருகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாப் விளைச்சல் முழுவதும் நாசம்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை பஞ்சாப் மாகாணம்தான் நாட்டின் முக்கிய விவசாய உற்பத்தி பிராந்தியம். தற்போது வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியுள்ள பிரதேசமும் அதுதான். பஞ்சாப் மாகாணத்தின் மொத்த விளைச்சலும் நாசமாகிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானின் பெரும்பங்கு விவசாயமும் வீணாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைச் சமாளிக்க ரூ.730 கோடி தேவைப்படும் ஒரு தேசிய செயல் திட்டத்திற்கும் (என்ஏபி) பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார். பாக். அமைச்சர்கள் மற்றும் நான்கு மாகாணங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், "பண்ணைகள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். எனவே, தேசிய பயிர்களைக் காப்பாற்றவும், சம்பந்தப்பட்ட காலாண்டுகளுக்குத் தேவையான வளங்களை வழங்கவும் மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும் அழிவைத் தவிர்க்க ரூ .7.3 பில்லியன் அதாவது (ரூ.730 கோடி) தொகை தேவைப்படுகிறது. நிலைமையைக் கையாள தேசிய அவசரநிலைப் பிரகடனம் சிறந்தது. தவிர, நிலைமையை நாடாளுமன்றமும் உன்னிப்பாகக் கண்காணித்து வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x