ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது பிரிட்டன்
Updated on
1 min read

ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இருந்து வந்த பிரிட்டன் நேற்று நள்ளிரவு அதிலிருந்து வெளியேறியது. இதனை ‘பிரெக்ஸிட்' ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண் டாடினர்.

‘ஐரோப்பிய யூனியனில்' பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, ஸ்வீடன், ஸ்பெயின் உட்பட 28 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ளதால் பிரிட்டனால் பல விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்க இயலாத சூழல் நிலவுவதாக அந்நாட்டில் ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என பரவலாக கருத்து எழுந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையில் பிரிட்டன் இறங்கியது. இது ‘பிரெக்ஸிட்' என பொதுவாக அழைக்கப்பட்டது.

பிரெக்ஸிட் விவகாரத்தால் பிரிட்டன் நாடாளுமன்றம் அண்மையில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடந்தது. இதில், கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, பிரெக்ஸிட் மசோதா கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்திலும் பிரெக்ஸிட் மசோதா இரண்டு தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை குறிக்கும் விதமாக, பிரெக்ஸிட்டுக்கான ‘கவுன்ட் டவுன்' நேற்று காலை தொடங்கியது. இதற்காக, பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டின் முன்பு ராட்சத கடிகாரம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சரியாக நள்ளிரவு 11 மணிக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறியது.

அப்போது, பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில் கூடியிருந்த பிரெக்ஸிட் ஆதரவாளர்களும், பொதுமக்களும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர். இதையடுத்து, பிரிட்டனின் அரசு தொலைக்காட்சியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோன்றி மக்களிடையே உரையாற்றினார். ‘‘பிரெக்ஸிட் என்பது முடிவு அல்ல. ஒரு யுகத்தின் தொடக்கம். பிரிட்டனின் உண்மையான புத்தாக்கத்துக்கும் மாற்றங்களுக்குமான சரியான தருணம் இது. இனி புதிய பாதையில் பிரிட்டன் பயணிக்கும்’’ என அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in