இலங்கை தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 61 பேரின் காவல் நீட்டிப்பு
இலங்கை தேவாலய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 61 பேரின் காவலை அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று நீட்டித்தது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்கள், நடத்திர ஓட்டலில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 259 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான தேசிய தவ்ஹீத் ஜமாத் தாக்குதலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இலங்கை போலீஸார் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அவர்களின் காவல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 61 பேர் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வரும் பிப்ரவரி 12 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக இருவர் மீதும் ராஜபக்ச குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 18-ம் தேதி இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சவும் கடந்த நவம்பர் 21-ம் தேதி இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் பதவியேற்றனர். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தேவாலய தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை வேகம் பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் சிறிசேனா, முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோரிடம் போலீஸார் அண்மையில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
