Published : 30 Jan 2020 11:35 AM
Last Updated : 30 Jan 2020 11:35 AM

’எனது பெயர் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது’ - கிரேட்டா தன்பெர்க் ஆவேசம்

தனது பெயரையும் தனது இயக்கமான ‘ஃப்ரைடேஸ் ஃபார் ப்யூச்சர்’ இயக்கத்தின் பெயரையும் தவறான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுக்க அவற்றுக்கு காப்புரிமை பதிவு செய்துள்ளதாக கிரெட்டா துன்பெர்க் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்களைக் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்டார் கிரெட்டா.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார் கிரெட்டா. இவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “சிறப்பான எதிர்காலத்தை நோக்கியிருக்கும் மகிழ்ச்சியான சிறுமி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

கிரெட்டாவின் முயற்சிகளுக்கு ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியார்னோடோ டிகாப்ரியோ தொடங்கி பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (29.01.20) தனது பெயரையும் தனது இயக்கமான ‘ஃப்ரைடேஸ் ஃபார் ப்யூச்சர்’ இயக்கத்தின் பெயரையும் தவறான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுக்க அவற்றுக்கு காப்புரிமை பதிவு செய்துள்ளதாக கிரெட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து கிரெட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய பெயரும், எங்கள் ‘ஃப்ரைடேஸ் ஃபார் ப்யூச்சர்’ இயக்கத்தின் பெயரும் எங்கள் அனுமதியின்றி தொடர்ந்து விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கும் எங்கள் இயக்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் காப்புரிமை பதிவு செய்வதில் எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோரைத் தொடர்பு கொள்வதற்காக சிலர் என்னையும், என்னுடைய பெயரையும் தவறான வழியில் பயன்படுத்த முயல்கின்றனர். சிலர் என் பெயரையும் என் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திப் பணம் ஈட்டி வருகின்றனர். எனவே, அவற்றை காப்புரிமைக்காக பதிவு செய்துள்ளேன்.

எங்கள் இயக்கத்தின் குறிக்கோள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், சமூக ஸ்திரத்தன்மை, மனநலம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு மட்டுமே."

இவ்வாறு கிரெட்டா துன்பெர்க் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கிரெட்டா, தனது பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சாரங்களைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x